கட்டுரை

சாத்தியமாகுமா அ.தி.மு.க. வெற்றி?

யூகி

ஜெ ஆதரவு ஓட்டு யாருக்கு? மோடியா? லேடியா?'' என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க  குரல் எழுப்பியதெல்லாம் மறதி படியாதவர்களுக்குச்  சற்று நினைவிருக்கலாம். அ.தி.மு.க.வினரே கூட சௌகர்யமாக மறந்து போயிருக்கலாம்.  

நிலைமை தலைகீழாக மாறும் என்று அப்போது யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தனித்து நின்று 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதி களில் வென்று, சுமார் 44.5 சதவிகித வாக்குகளை வாங்கியதெல்லாம் அப்போது வியப்பாகப் பேசப்பட்ட சமாசாரங்கள்.

தற்போது ஜெயலலிதா மறைந்தபிறகு அதே அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியின் நிலை என்ன? கழகத்தின் தனி அடையாளத்தைப் போலச் சொல்லப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்று சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க அடைந்த தோல்வி யோசிக்க வைத்திருப்பதன் பலன் தான் தற்போது அதன் கூட்டணியில் நடந்திருக்கிற அவசர மாற்றங்கள்.

பா.ஜ.க. தான் அ.தி.மு.க ஆட்சியை இயக்குகிறது என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், பா.ஜ.க.வும், அ.தி.மு.க. வும் கண்டிப்பாகக் கூட்டணி அமைப்பார்கள் என்று பலரும் நம்பினார்கள். நம்பியது போலவே நடந்தது. டெல்லியிலிருந்து வந்திறங்கிப் பேசிவிட்டுப் போனார், மத்திய அமைச்சரான பியூஷ்கோயல். மதுரைக்கும், திருப்பூருக்கும் வந்து பிரசாரத்தைத் துவக்கி வைத்துவிட்டுப் போனார், பிரதமர் மோடி. கண்டிப்பாக பத்து இடங்களுக்கு மேல் பா.ஜ.க.வுக்குக் கிடைக்கும் என்று ஊடகங்கள் ஆருடம் சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் பொய்யாயிற்று. பா.ஜ.க.வுக்கு ஐந்து தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதில் பலருக்கு ஆச்சர்யம். இவ்வளவுக்கும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்குக் கிடைத்த வாக்குவங்கி 5.3 சதவிகிதம்.

அதைவிடக் கடந்த தேர்தலில் 4.4 சதவிகித வாக்குகளை வாங்கிய காங்கிரஸுக்கு தி.மு.க. கூட்டணியில் பத்து இடங்கள் கொடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, மத்தியில் ஆளும்கட்சியாக இருக்கிற பா.ஜ.க..வுக்குக் கொடுக்கப்பட்ட தொகுதிகள் குறைவுதான். ஜெயலலிதாவை விடக் கறாரான எண்ணிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்திருப்பதும் அரசியல் அலசலுக்கான விஷயமானது. 'கழகங்கள் இல்லாத தமிழகம்' என்கிற கோஷத்தை முன்வைத்துக் கொண்டிருந்த பா.ஜ.க தன்னுடைய முழகத்தை மறந்து அ.தி.மு.கழகத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டது பா.ஜ.க.வின் சரிவையோ, இயலாமையையோ தான் காட்டுகிறது. ஆனால் அதிமுகவின் இடங்களும் நாங்கள் நிற்கும் இடங்கள் போலத்தான் என்று அர்த்தத்துடன் சொல்கிறார் ஒரு பாஜக பிரமுகர்.

ஆனால் பலவற்றில் மத்திய அரசின் மீது இருக்கிற மதிப்பு தமிழகத்தில் குறைந்திருக்கிறது என்பதை அ.தி.மு.க அரசு உணர்ந்திருப்பதன் பிரதிபலிப்பு என்று கூட பா.ஜ.க.வுக்குக் குறைந்த எண்ணிக்கையில் அ.தி.மு.க தொகுதிகளை ஒதுக்கியதற்கான காரணமாகச் சொல்லலாம். மெரீனா புரட்சிக்குப் பிறகும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தபிறகும் மத்திய பா.ஜ.க அரசின் மீது எழுந்த அழுத்தமான விமர்சனம் இதுவரை அடங்கவில்லை.

காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதல்கூட தமிழகத்தில் பா.ஜ.கவுக்கான ஆதரவான மனநிலையை உருவாக்கிவிடவில்லை. பா.ஜ.க.வைக் கூட்டணியில் சேர்த்ததால் அ.தி.மு.க.வுக்குச் சிறுபான்மை வாக்குகளை இழப்பது தான் உடனடியாகக் கிடைக்கக் கூடிய பலன் .

விவசாயிகளுக்கு இரண்டாயிரம் ரூபாயை வங்கிக்கணக்கில் செலுத்தும் திட்டத்தை, அதிலும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மத்திய அரசும் அமல்படுத்தியிருக்கிறது. மாநில அரசும் அமலாக்கி யிருக்கிறது. இது எப்படி பலன் தரும் என்று உடனே சொல்ல முடியாது.

இதுதவிர, ஆளும் கட்சியாக இருக்கிற அ.தி.மு.க தலைமைப் பொறுப்பில் இருக்கிறவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் கிடைக்கிற வெற்றியை விட, நடக்கவிருக்கிற 21 சட்டமன்றத் தொகுதிகளில் கிடைக்கிற வெற்றியே இப்போதைக்கு பிரதானமாக இருக்கிறது. எப்படியாவது ஆட்சியைத்தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அவர்களுடைய இலக்காக இருக்கிறது. அதற்கான அனைத்து அஸ்திரங்களையும் அவர்கள் கையாள்கிறார்கள். கூட்டணிக்குள் பலரை இழுத்துப் போட முயற்சிக்கிறார்கள்.

அப்படிப் பட்ட முயற்சியில் தான் பா.ம.க.வுக்குக் கூட்டணி வலை விரிக்கப்பட்டது. பா.ஜ.க. மாதிரியே பா.ம.க.வும் கழகங்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுத்த மாதிரி காட்டிக் கொண்டது. விரிவான புத்தகத்தை எழுதி வெளியிட்டது. தமிழக ஆளுநரிடம் ஆட்சியாளர்கள் பற்றிய ஊழல் குற்றச் சாட்டை முன்வைத்தது. கொத்தடிமை ஆட்சி என்று அண்மைக்காலம்வரை கடுமையாகச் சாடியது.

தனித்துப் போட்டி நம்பிக்கை இழந்து போயிருந்த பா.ம.க.வுக்குத் தேர்தல் நெருங்கியதுமே தான் நேற்றுப் பேசியவை அனைத்துமே பொருத்தமாக மறந்து போயின. ஒரே சமயத்தில் தி.மு.க.வுடனும், அ.தி.மு.க.வுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடப்பதைக் கூடப் பெருமிதமாக அறிவித்த பா.ம.க சடாரென்று அ.தி.மு.க வுடன் கூட்டணி என்று அறிவித்தது. பத்துக் கோரிக்கைகளுடன் கூட்டணி அமைத்ததாக நியாயப்படுத்திப் பேசினார் மருத்துவர் இராமதாசு. தைலாபுரத்தில் விருந்துகள் நடந்தன. வாய்விட்டுச் சிரித்த புகைப்படங்கள் வெளிவந்தன.

தனியார் ஹோட்டலில் நடந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது அன்புமணி ராமதாசுக்குத் தங்கள் நிலைப்பாட்டை உரிய வார்த்தைகளால் விளக்கமுடியவில்லை. அடிக்கடி தடுமாறிப் போனார். பத்திரிகையாளர்களிடம் கோபப்பட்டார். அவர்களைத் தண்ணீர் கொடுக்கச் சொன்னார். மைக்கைப் பிடுங்கச் சொன்னார். நேற்று வரை ஊழல் ஆட்சி என்று தமிழக ஆட்சியைக் குற்றம் சாட்டியவரால் தற்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லை. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டதன் பின்னணியில் பா.ம.க. மீது சமூக ஊடக வெளியில் பல புகார்கள் முன்வைக்கப்பட்டு சூட்டைக் கிளப்பின.

டி. டி. வி.

வன்னியர் சங்கத்தலைவராக இருந்த காடுவெட்டி குருவின் ஆதரவாளர்கள் தனியாக ஒரு சங்கத்தைத் துவக்கி பா.ம.க.வை எதிர்ப்பதெல்லாம் பா.ம.க வின் சாதிய வாக்குகளை ஓரளவு பாதிக்கலாம். சட்டமன்ற இடைத்தேர்தலில் வட மாவட்டங்களில் உள்ள பா.ம.க.வின் வாக்குகள் அ.தி.மு.க வுக்கு விழுந்து ஆட்சியைத் தக்க வைக்குமா என்பதெல்லாம் கேள்விக்குறியே.

பா.ம.க.வுக்கு இணையாகத் தங்களுக்குத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று தே.மு.தி.க தரப்பில் வற்புறுத்தப்படுகிறது.அதனால் தி.மு.க கூட்டணிப்பக்கம் போவதைப் போன்று பாவனை காட்டுவது தே.மு.தி.க.வின் தொகுதி பேரத்தை வலுப்படுத்தவே உதவும். சென்ற  2016 சட்டமன்றத் தேர்தலில் நூற்று நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு தே.மு.தி.க பெற்ற வாக்குச் சதவிகிதம் 2.4. ( 2014ல் 4.8 சதவிகிதம்).

அ.தி.மு.க வாக்கு வங்கியை மையப்படுத்தி இயங்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கணிசமாக அ.தி.மு.க வின் வாக்குகளை 15 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதம் வரை பிரிக்கலாம். ஆர்.கே.நகர் தொகுதி மாதிரியான வெற்றிவாய்ப்புச்சூழல் தினகரனுக்குக் குறைவு என்றாலும் பெருவாரியான அ.தி.மு.க வாக்குகளைப் பிரிப்பார். அது தி.மு.க.வுக்கு சாதகமாகவும் அமையலாம்.

பா.ஜ.க.வின் 5.3 சதவிகித வாக்குகள், பா.ம.க.வின் 4.1 சதவிகித வாக்குகள், இன்னும் ஒருவேளை தே.மு.தி.க.வும் இணைந்தாலும் மொத்த வாக்குச் சதவிகிதம் 15 ஐத் தாண்டவாய்ப்பில்லை. இவை தவிர தினகரன் தலைமையிலான அ.ம.மு.க தனித்துப் போட்டியிடுவதால் சுமார் இருபது சதவிகித  வாக்குகள் அ.தி.மு.க.வுக்குக் கிடைத்தாலும் கூட ஒட்டுமொத்தமாக 35 சதவிகித வாக்குகளைத் தாண்டவே அதிகபட்ச சாத்தியமிருக்கிறது. இது தான் இன்றைய( பிப்ரவரி 26 ஆம் தேதி) சூழல்.

கூடுதலான அதிகார பலம், பண பலம் எல்லாம் சேர்ந்து வாக்காளர்களின் மனநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்க வாய்ப்பிருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் மனமுவந்து இந்த முயற்சிகளை சிரமம் இல்லாமல் அமல்படுத்தலாம். மீண்டும் ஆர்.கே.நகர் அதிசயங்கள் நடக்கலாம்.

தமிழக வாக்காளர்கள் அப்படியொன்றும் இந்தச் சூழலை எல்லாம் அறியாதவர்கள் அல்ல. எடப்பாடி பழனிச்சாமி தன் ஆட்சியைப் பற்றிய எல்லா கணிப்புகளையும் பொய்த்துப் போகவைத்து தாக்குப் பிடித்திருக்கிறார். ஆனால் நேரடியாக மக்களைச் சந்திக்கும் இந்தத் தேர்தல் அவருக்கு அக்னிப்பரிட்சை என்றே சொல்லலாம்.

மார்ச், 2019.